புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் குளிர்பான பாட்டிலில் பல்லி, கரப்பான் பூச்சி, ஆணிகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோம். இதெல்லாம் ஒரு துளிதான். மற்றபடி நாள்தோறும் வெவ்வேறு விதங்களில் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சின்ன நிறுவனம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கஸ்டமரை ஏமாற்றவே செய்கின்றன. இதையெல்லாம் எதிர்த்து என்ன செய்ய வேண்டும்? நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பை எப்படி ஈடுகட்டுவது?
‘‘நுகர்வோர் நீதிமன்றம் மூலம் இதற்கெல்லாம் நஷ்டஈடு பெற முடியும். இதற்காகவே நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றங்கள் இயங்கி வருகின்றன. சுய உபயோகத்திற்காக பொருட்கள் வாங்குபவர்கள் மற்றும் சேவையை பெறுபவர்கள் நுகர்வோராக கருதப்படுவார்கள். ஆனால், இதனை வியாபார நோக்கில் வாங்குபவர்கள் நுகர்வோர்களாக மாட்டார்கள். அதாவது, ஒரு பொருளை விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக வாங்கி தன் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்துபவர் நுகர்வோர்.
அதே பொருளை ஒருவர் பெற்று அவரிடம் இருந்து மற்றவர் வாங்கிக் கொள்கிறார் என்றால் அவர் நுகர்வோராக கருதப்பட மாட்டார். மருத்துவம், உணவு மற்றும் எந்த விதமான சேவைகளை பெறுபவர்களும் நுகர்வோர் பட்டியலில் இடம் பெறுவார்கள். இவ்வாறு பெறப்படும் பொருட்களிலோ அல்லது சேவையிலோ குறைபாடு இருந்தால், அதற்காக நஷ்டஈடை பெற்றுத் தருவதுதான் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் வேலை. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக நுகர்வோர் குறைதீர் மன்றங்களை அணுகி புகாரை தாக்கல் செய்யலாம்’’
இவரைத் தொடர்ந்தார் நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் மோகன் தாஸ். ‘‘இந்த நுகர்வோர் குறை தீர் மன்றம் இந்தியாவில் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய குழு என மூன்று நிலையில் செயல்படுகிறது. நுகர்வோருக்கு ஏற்பட்ட நஷ்டம், ரூபாய் 20 லட்சத்துக்குள் என்றால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக வேண்டும். 20 லட்சம் முதல் ஒரு கோடி வரை இழப்பீடு பெற வேண்டும் என்றால் அவர்கள் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தை அணுக வேண்டும். ஒரு கோடிக்கு மேல் என்றால் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுக வேண்டும்.
அதே போல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் மேல் முறையீடுகளுக்கு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும்; மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மேல் முறையீடுகளுக்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுகலாம். தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கும் உத்தரவுகளின் மேல் முறையீடுகளுக்கு உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
இந்த சட்டம் நுகர்வோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அவர்களின் உரிமைக்காகவும் வகுக்கப்பட்டுள்ளது.
உடலுக்கும், உடமைக்கும் தீங்கு விளைகின்ற வகையில் வணிக நோக்கில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளிடமிருந்து நுகர்வோர் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் உரிமை.
மலிவு அல்லது போட்டி விலைகளில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த நம்பகத் தன்மையை நுகர்வோருக்கு உறுதிப்படுத்தும் உரிமை.
மலிவான சலுகை விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களினால் இழுக்கப்பட்டு, அதன் பலனை வணிக நிறுவனம் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டதை தெரிவிக்கும் உரிமை.
நுகர்வோரின் குறைகளைக் கேட்பதற்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை.
நேர்மையற்ற வணிகத் தொழிலினால் அல்லது மனச்சாட்சியற்ற சுரண்டல்களினால் ஏற்பட்ட பாதிப்பினால் நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தை நாடும் உரிமை.
நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சரி, இதை எப்படி பெற வேண்டும்?
பொருட்களில் உள்ள தரக்குறைப்பாடு மற்றும் சேவையில் குறைப்பாட்டை கண்டறிந்தவுடன், அதற்கான சரியான ஆவணத்துடன் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி புகாராக பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்தால்தான் தரமற்ற பொருள் என்று நிரூபிக்க முடியும். எனவே, எந்த ஒரு பொருளை வாங்கினாலும், முறையாக அதற்கான பில்லை பெறுவது அவசியம்.
புகார்களை தாக்கல் செய்யும் போது, கோரப்படும் நஷ்டஈடு தொகைக்கான போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டிக்கான தொகையை செலுத்த வேண்டும். அந்தியோத்தியா அட்டை உள்ளவர்கள் ஒரு லட்சத்துக்குள் நஷ்ட ஈடு கேட்பதாக இருந்தால் எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டாம். இந்த அட்டை இல்லாதவர்கள், ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை தொகை கேட்பதாக இருந்தால் அவர்கள் ரூ.200 செலுத்த வேண்டும். 5 லட்சம் முதல் 10 லட்சம் என்றால் ரூ.500ம், 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை என்றால் ரூ.4000ம், ஒரு கோடிக்கு மேல் என்றால் ரூ.5000ம் கட்டணம் செலுத்தவேண்டும்.
வாங்கிய பொருளில் குறைபாடும், சேவையில் குறைபாடும் இருந்தால், பொருட்களை பெற்ற நாட்களில் இருந்து இரண்டு ஆண்டுக்குள் புகார் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுக்குள் செலுத்த முடியவில்லை என்றால், மனு தாக்கல் செய்யும் போது தாமதத்துக்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். பொருட்களை எம்.ஆர்.பி. விலையில் இருந்து அதிகமாக விற்கக்கூடாது. இதற்கு அன்ஃபேர் டிரேட் பிராக்டிஸ் என்று பெயர். இன்னொரு விஷயம், சேவை என்று வரும் போது அது மருத்துவ சேவை மட்டுமல்ல... அழகு குறித்த சேவையாகவும் அது இருக்கலாம்.
உதாரணமாக ஒரு விமான பனிப்பெண் தலை முடி உதிர்வதற்கான சிகிச்சை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த சிகிச்சை மூலம் முடி வளரவில்லை. இருந்த தலைமுடியும் கொட்டி விட்டது. இதற்காக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்து நஷ்டஈடு பெற்றார். அதே போல் மருத்துவ துறையில் தவறாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவரின் அலட்சிய போக்குக்காகவும் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்...’’




No comments:
Post a Comment